அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்; கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேச்சு வார்த்தை நடத்தினார்.மாணவர் நலன் கருதி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப வேண்டும். சி.ஏ.எஸ்., உறுப்பினர்களுக்கு திருத்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும். ஆட்சி மன்றக் குழு அமைக்க வேண்டும்.பேராசிரியர்கள் பணி ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும். புதிய பதவிகள் மற்றும் பொறுப்புகள் நியமனத்தில் சீனியாரிட்டி முறையை செயல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் வகுப்பறையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.கோரிக்கைகளை கேட்டரிந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., போராட்டம் தொடர்பாக கவர்னர், முதல்வர், துறை செயலாளர் மற்றும் துறை இயக்குநரிடம் கலந்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.