பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் போதை பொருளை பயன்படுத்தியுள்ளனர் கவர்னர் கைலாஷ்நாதன் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரி: தனியார் நிறுவனம் சார்பில் போதைப் பொருள் இல்லாத புதுச்சேரி என்ற தலைப்பில் கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.நடைபயணத்தை கவர்னர் கைலாஷ் நாதன் துவக்கி வைத்தார். முன்னதாக போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர். நடைபயணத்தை துவக்கி வைத்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒருமுறையாவது போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது. 18 வயதுக்குட்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த பழக்கம் வந்திருப்பது மிகப்பெரிய ஆபத்து. இது பெற்றோருக்கு மிகப்பெரிய கவலை அளிக்கும் விஷயம். போதைப் பொருள் விற்கும் நபர்களை காவல் துறை கடுமையாக ஒடுக்கும். ஆனால், மாணவர்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., டி.ஐ.ஜி. சத் தியசுந்தரம், சென்னை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி., தீபக் கவுஷிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.