ஓட்டுச்சாவடிகளில் தீவிர ரோந்து பணி
புதுச்சேரி: அனைத்து ஓட்டுச்சாவடிகளை சுற்றி தடை உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின்படி, ஓட்டுச்சாவடி மையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டது. அந்த எல்லைக்குள் எந்தவொரு அரசியல் கட்சியினரும் பிரசார பதாகைகள் அமைப்பதற்கோ, துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வதற்கோ மற்றும் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவதற்கோ தடை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டுப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய புதுச்சேரி காவல் துறையினருடன் இணைந்து, துணை ராணுவத்தினர் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுச்சாவடிக்கு அருகில் தேவையின்றி கூட்டமாக நின்றவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.