கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்; அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டை கிராமத்தில் உள்ள, ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள் கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், வடகலை வைணவ சம்பிரதாயப்படி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2020ல் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அறநிலையத் துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் கூறியதாவது:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படியிருந்தும், இந்த விஷயத்தை, ஹிந்து அறநிலையத்துறை அலட்சியத்துடனும், மந்த கதியிலும் செயல்பட்டுள்ளது. இக்கோவில், பழமையான பாரம்பரிய நினைவு சின்னமாகும். இது, பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசார நினைவு சின்னங்கள், தேசிய சொத்தாகும். இதை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும், பொது மக்களுக்கும் உள்ளது. மனுதாரர் கூறும் கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது துரதிருஷ்டவசமானது. கோவில் உள்ளிட்டவை தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாக பின்பற்றாவிட்டால், அறநிலையத் துறை கமிஷனரை நீக்கம் செய்யும்படியும், இணை ஆணையருக்கு, எந்தவித பதவி உயர்வும் வழங்ககூடாது என்றும், உத்தரவு பிறப்பிக்க நேரிடும். எனவே, உடனே அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலை ஆய்வு செய்து, பணிகளை துவக்க வேண்டும். விஜய வரதராஜ பெருமாள் கோவிலில் இதுவரை நடந்துள்ள சீரமைப்பு பணிகள் என்ன, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்து, அறநிலையத்துறை கமிஷனர் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29க்கு தள்ளி வைத்தனர்.