| ADDED : நவ 22, 2024 05:40 AM
புதுச்சேரி: ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள கோவில் நிலம், ஐகோர்ட் உத்தரவின்படி, இந்து சமய அறந்நிலைத்துறையினர் நேற்று அதிரடியாக மீட்டனர்.வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய, 11.5 ஏக்கர் நிலம், முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே உள்ளது. அந்த நிலத்தை குத்தகை எடுத்து கடந்த 20 ஆண்டாக விவசாயம் செய்து வந்த முதலியார்பேட்டையை சேர்ந்த ராமசாமி என்பவர், நிலத்தில் கொட்டகை அமைத்து நிலம் தனக்கு சொந்தம் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கில் இந்து அறநிலையத்துறை வாதங்களை ஏற்ற கோர்ட், ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை சார்பில், ராமசாமிக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நிலத்தை ஒப்படைக்காமல் காலம் கடத்தினார்.அதனைத் தொடர்ந்து, பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில், தாசில்தார் பிரித்திவிராஜ், கோவில் தனி அதிகாரி சுரேஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் சென்று, ராமசாமி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தை மீட்டு, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை அமைத்தனர். அங்கு ராமசாமி கட்டியிருந்த கொட்டகைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.