மனைவியை தாக்கிய கணவருக்கு வலை
புதுச்சேரி: மனைவியை, பீர் பாட்டிலால் தாக்கிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். வாணரப்பேட்டை, அலென் வீதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 29; பொம்மை வியாபாரி. இவரது கணவர் தர்மன்,35. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்செல்வி தனது பிள்ளைகளுடன் கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். தர்மன் வைத்திக்குப்பத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி கடற்கரை சாலை, காந்தி திடலில் தமிழ்ச்செல்வி பொம்மை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு குடிபோதையில் வந்த தர்மன், தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறி திட்டி, பீர் பாட்டிலால் தமிழ்ச்செல்வியை தாக்கினார். படுகாயமடைந்த தமிழ்செல்வி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தர்மனை தேடி வருகின்றனர்.