உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தள்ளாடும் சுண்ணாம்பாறு படகு குழாம்; தனியாருக்கு துணைபோகும் அதிகாரிகள்

தள்ளாடும் சுண்ணாம்பாறு படகு குழாம்; தனியாருக்கு துணைபோகும் அதிகாரிகள்

புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றான சுண்ணாம்பாறு படகு குழாம், அதிகாரிகளின் அலட்சியத்தால் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளாடிக் கொண்டுள்ளது. புதுச்சேரியின் பொருளாதாரம் சுற்றுலா பயணிகளை சார்ந்தே உள்ளது. அதனை உணர்ந்தே, அரசு சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலுார் சாலையில் உள்ள சுண்ணாம்பாற்றில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் அமைத்து, அங்கிருந்து, 'பாரடைஸ் கடற்கரைக்கு' படகுகள் இயக்கி வருகிறது. குடில் படகு, ஸ்பீடு படகு, பாண்டனா என 12 வகை படகுகள் இயக்கப்பட்டு வந்தது. இதனால், படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், இந்த படகு குழாம், புதுச்சேரியின் அடையாளங்களின் ஒன்றாகவே மாறியது. அவ்வளவு சிறப்பு மிக்க இந்த படகு குழாம், அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தள்ளாடிக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 12 படகுகளில் 7 படகுகள் பழுதாகி ஓரம் கட்டப்பட்டுள்ளது. இயங்கி வரும் 5 படகுகளில் உள்ள இன்ஜின்களும் அவ்வப்போது பழுதாகிவிடுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், பேரடைஸ் பீச்சில் எந்த பொழுது போக்கு அம்சங்களும் இல்லை. பழுதடைந்த படகுகளை சீரமைக்கவோ, நவீன மோட்டார் பொருத்தவோ, பீச்சில் பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர். அதே நேரத்தில் தனியார் பீச்சுகளில் குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டினம், பாரா கிளைடர், நீர் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் சுண்ணாம்பாறு படகு குழாமிற்கு வருவதை தவிர்த்து, தனியார் படகு குழாமிற்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, சுண்ணாம்பாறு படகு குழாமிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்துவிட்டது. அதாவது, கடந்த 2 ஆண்டிற்கு முன் வார இறுதி நாட்களில் 3,000 பேர் வந்த நிலையில் தற்போது 1000 பேருக்கு குறைவாகவே வருகின்றனர். இதனால், போதிய வருவாய் இன்றி சுண்ணாம்பாறு படகு குழாம் தள்ளாடிக் கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் நடத்தும் படகு குழாம்கள் மற்றும் பீச்சுகளுக்காக அதிகாரிகள் திட்டமிட்டே, சுண்ணாம்பாறு படகு குழாமை செயலிழக்க செய்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேநிலை நீடித்தால், படகு குழாமை இழுத்து மூடினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை