உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சபாநாயகருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு சஸ்பெண்ட் சட்டசபை காவலர்களால் வெளியேற்றம்

சபாநாயகருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு சஸ்பெண்ட் சட்டசபை காவலர்களால் வெளியேற்றம்

புதுச்சேரி: சபாநாயகருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சட்டசபை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை துவங்கி வைத்தார்.அப்போது ஆளுங்கட்சி ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு எழுந்து பேசினார்.சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து இருக்கிறோம். எனவே அவை நடத்த அவர் தகுதியில்லை. துணை சபாநாயகரை கொண்டு சட்டசபை நடத்த வேண்டும் என ஆவேசத்துடன் பேசினார்.தொடர்ந்து சபாநாயகர் சபையை நடத்துவது ஜனநாயக விரோதம் என கூறிக்கொண்டே முதல்வர் ரங்கசாமியிடம் சென்றார். நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொடுத்து இருக்கிறோம். துணை சபாநாயகரை அமர செய்ய வேண்டும். ஏற்கனவே மனுவும் கொடுத்துள்ளோம் என, கூறினார்.அதே நேரத்தில் சபாநாயகர் செல்வம், மறைந்த முதல்வர் ராமச்சந்திரனுக்குஇரங்கல் தீர்மானம் கொண்டு வருமாறு முதல்வரை அழைத்தார்.அதை கண்ட சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு ஆவேசமடைந்தார்.சபாநாயகர் இருக்கை எதிரே தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார். அதே நேரத்தில் சட்டசபை வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களும், ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் நுழைந்தனர்.அப்போது சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா செய்த நேரு எம்.எல்.ஏ., சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கெனவே அளித்த பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரையும் அழைத்தார்.அவர்களும் நேரு எம்.எல்.ஏ.,வுடன் சபாநாயகர் இருக்கை முன்பாக சென்றனர். தொடர்ந்து சபாநாயகர் செல்வம் நிகழ்வுகளை நடத்தினார். இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சிவாவை பேச அழைத்தார்.அப்போது நேரு எம்.எல்.ஏ., தமிழகம் உள்ளிட்ட பிற சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்தான் சக உறுப்பினர்களின் உரிமைகளை பெற்று தருகின்றனர். ஆனால் இது தலைகீழாக உள்ளதுஎன்றார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, அவையை தொடர்ந்து நடத்த ஏதாவது ஒரு முடிவு எடுங்கள். எங்கள் உரிமைகள் மீறப்படுகிறது. சொந்த பிரச்னைகளுக்காக ஆதரவாக செயல்பட முடியாது. அரசுக்கு ஆதரவு தருகிறீர்கள், சபாநாயகரை எதிர்க்கிறீர்கள், இது தவறான போக்கில்லையா என்றார்.அப்போது நேரு எம்.எல்.ஏ., தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அவருக்கு ஆதரவாக சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கரும் பேசினர்.இதையடுத்து சபாநாயகர் செல்வம்,சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் நேரு எம்.எல்.ஏ.,வை கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவையிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சட்டசபை மார்ஷலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபை காவலர்கள் நேரு எம்.எல்.ஏ.,வை குண்டுகட்டாக வெளியேற்றினர்.அதே நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., போராட்டம் நடத்தியபோது உடனிருந்தஅங்காளன், சிவசங்கர் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ