மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்
புதுச்சேரி,: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியினர் நடத்திய மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.புதுச்சேரியில் ஜூன் 16ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஊர்வலம் நடந்தது. இதைத் தொடர்ந்து முதல் 200 யூனிட்களுக்கு ரூ.85 பைசா அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனாலும் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. சட்டப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதை மாற்றும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி செப்.18 ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பஸ், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.இதன்படி நேற்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் துவங்கியது. நகர பகுதியில் பெரிய வணிக வளாகம் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்துமே அதிகாலை முதல் திறக்காமல் மூடப்பட்டு இருந்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் முக்கிய வணிக வீதிகளான நேருவீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் வீதி, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. மார்க்கெட்கள்
பெரிய மார்க்கெட் குபேர் மார்க்கெட், மீன் அங்காடி, நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட், செஞ்சி சாலை மார்க்கெட் அனைத்துமே மூடப்பட்டிருந்தது. சாலையோரம் இருக்கும் அனைத்து மீன் மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு இருந்தது. பஸ்கள்
பந்த் போராட்டம் காரணமாக உள்ளூர், வெளியூர் பயணிகளால் நிரம்பி வழியும் ஏ.எப்.டி., தற்காலிக பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக பஸ்கள் புதுச்சேரி எல்லைப்பகுதிகளான கணகசெட்டிக்குளம்,முள்ளோடை,கோரிமேடு,மதகடிப்பட்டு வரை மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். அங்கிருந்து புதுச்சேரிக்கு பயணிகள் நடந்தே வந்தனர். பஸ் கண்ணாடி உடைப்பு
பி.ஆர்.டி.சி., , தமிழக அரசு பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இருப்பினும் நெல்லித்தோப்பில் பி.ஆர்.டி.சி., பஸ் ஒன்றும், முதலியார்பேட்டையில் கடலுார் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ் கண்ணாடி ஒன்றும் உடைக்கப்பட்டது. இதர வாகனங்கள்
ஒரு சில டெம்போ ஆட்டோக்கள் மட்டுமே இயங்கின. ்அவையும் மதியத்திற்கு மேல் இயங்கவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை
மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், அரசே ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது. அதேநேரத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான பஸ்கள் இயக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவர்களை பெற்றோர் தங்களது பைக்குகளில் கொண்டு சென்றுவிட்டனர். அரசு பள்ளிகள் இயங்கினாலும் வருகை பதிவு குறைவாக இருந்தது. தியேட்டர்கள்
தியேட்டர்களில் பகல் காட்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டன. புதுச்சேரியில் உள்ள மத்திய,மாநில அரசு அலுவலங்கள் வழக்கம்போல் இயங்கின. அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். தொழிற்சாலைகள்
பந்த் போராட்டம் காரணமாக சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், மருத்துவமனை, அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர். பலரும் வெகுநேரம் காத்திருந்தும் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காததால் அவதி அடைந்தனர். பெட்ரோல் பங்க்குகள் மூடல்
பந்த் போராட்டம் காரணமாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டு கிடந்ததால், பெட்ரோல் கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகினர். திறந்திருந்த ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளை தேடி சென்று எரிபொருள் நிரப்பி கொண்டு வீடு திரும்பினர். இயல்வு வாழ்க்கை பாதிப்பு
ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகர் முழுக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் முக்கிய சிக்னல்கள், புது பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம் எதிரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.