விளையாட்டு வீரர்களின் பயண செலவை அரசே ஏற்க வலியுறுத்தல்
புதுச்சேரி : பூஜ்ய நேரத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:புதுச்சேரியில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதற்கு 2 லட்சம் வரை செலவு ஆகிறது. இந்த பயண செலவு தொகை சமாளிக்க முடியாமல் விளையாட்டு வீரர்கள் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் இதுபோன்று விளையாட செல்லும் வீரர்களின் பயண செலவினை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. இது போன்று புதுச்சேரி அரசும் விளையாட்டு வீரர்களின் பயண செலவினை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் புதுச்சேரியின் பெருமை பறைசாற்றுகின்றனர். எனவே அவர்களுக்கு விளையாட்டு சீருடை, பயிற்சி உபகரணங்களையும் அரசே வழங்க வேண்டும்.