நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
புதுச்சேரி: காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கான 'நேர்முகத் தேர்வு திறன்கள்' என்ற தலைப்பில் முன் வேலைவாய்ப்பு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாபு அசோக் தலைமை தாங்கி பேசுகையில், 'மாணவிகள் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுகளில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்று வெற்றி பெற தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். தலைமை விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாக வணிகவியல் துறை தலைவர் அருள்முருகன் பங்கேற்று மாணவிகள் நேர்முகத்தேர்வில் வெற்றிபெறுவதற்கான முக்கிய அம்சங்கள், சுய அறிமுகம், தொடர்புத்திறன், உடல்மொழி, குழு விவாதம் மற்றும் தொழில் நெறிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முறைகள், வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான நடைமுறை ஆலோசனைகள், மாணவிகள் கல்லுாரி பருவத்தில் தங்கள் துறையில் பயின்ற தொழில்நுட்பங்களை வேலை வாய்ப்பிற்கு தகுந்தவாறு எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது என்பது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் அனைத்து துறையின் இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் விமலன் செய்திருந்தார்.