தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
புதுச்சேரி: காத்திருப்போர் பட்டியலில் இருந்த நான்கு பேருக்கு, தீயணைப்பு வீரருக்கான பணி ஆணையினை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியாக இருந்த பணியிடங்கள், நேரடி போட்டி தேர்வு வாயிலாக, உடற் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த மே மாதம் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், காலியாக இருந்த பணியிடங்களை முதன்மை தேர்வுப் பட்டியலில் இருந்தவர்கள் பணியில் சேரத் தவறியதால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட, காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை கொண்டு பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட நான்கு தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி சட்டசபையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தேர்வான தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.