பேராசிரியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை திருட்டு
புதுச்சேரி: காலாப்பட்டில் பேராசிரியர் வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, காலாப்பட்டு, மத்திய பல்கலைக்கழக அலுவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சித்தார்த் புஸி, 45; பேராசிரியர். இவர், கடந்த 29ம் தேதி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். கடந்த 3ம் தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக சித்தார்த்திற்கு தகவல் வந்துள்ளது.இதையடுத்து, தான் வெளியூரில் இருப்பதால், குடியிருப்பின் மேல் தளத்தில் வசிக்கும் யுகேஸ்வரன் என்பவரை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு சென்று பார்க்கும்படி சித்தார்த் புஸி கூறியுள்ளார்.அதன்படி, யுகேஸ்வரன் பல்கலைக்கழக பாதுகாவல் அதிகாரி மற்றும் காலாப்பட்டு போலீசாருடன் சித்தார்த் வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டின் உள்ளே இருந்த மர அலமாரி மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளன.இதையடுத்து, சித்தார்த் கூறியதன் பேரில், வீட்டில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான 264 கிராம் தங்க நகைகள், தலா 2 வெள்ளி பிளேட், லேம்ப் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.யுகேஸ்வரன் புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, பேராசிரியர் குடியிருப்பில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி செல்லும் மர்ம நபரின் சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.