ஜிப்மர் பயிற்சி டாக்டர் கத்தியால் குத்தி தற்கொலை
புதுச்சேரி : கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற ஜிப்மர் பயிற்சி டாக்டர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி ஆனந்தா நகர், வரதன் வீதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது 2வது மகன் ரவீந்திரன், 25; ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் முதுகலை மருத்துவம் (எம்.டி) முடித்து, பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மருத்துவக் கல்லுாரி தேர்வு காரணமாக, இரவு, பகலாக படித்து வந்த ரவீந்திரன் மன அழுத்தத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த செப்., மாதம் விடுமுறை கிடைக்காததால் மேலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. செப்., 21ம் தேதி வீட்டில் இருந்த ரவீந்திரன், காய்கறி வெட்டும் கத்தியால், இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பகுதியில் தனக்கு தானே குத்திக் கொண்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.