வாழ்வில் உயர காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம்...கை கொடுக்கிறது: மாணவர்கள் அரியர்ஸ் வைத்தால் அவ்வளவு தான்
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், பி.டெக்., கலை அறிவியல் படிப்புகளுக்கு அடுத்தடுத்து சென்டாக் கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் பலருக்கு புதுச்சேரி அரசின் காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து, அவற்றிற்கு விடை தேட, சென்டாக், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அலைந்து திரிகின்றனர். அவர்களுக்கான காமராஜர் கல்வி உதவி திட்டம் குறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் பகிர்ந்தவை: புதுச்சேரியை சேர்ந்த எந்த ஒரு மாணவரும் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்பதற்காக மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பினை கைவிடக் கூடாது என்பதற்காக தான் காமராஜர் கல்வி உதவி திட்டத்தை முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்தார். இந்த திட்டத்தினால் மாணவர்களின் மருத்துவம், இன்ஜினியரிங் கனவு நனவாகி வருகிறது. எம்.பி.பி.எஸ்., பயில 2.25 லட்சம் ரூபாயும், இன்ஜினியரிங் படிக்க 25 ஆயிரமும், நர்சிங் படிக்க 8 ஆயிரம் ரூபாய் தந்து வருகிறது.இப்போது அனைத்து படிப்புகளுக்கும் காமராஜர் கல்வி நிதிஉதவி திட்டத்தினை விரிவாக்கம் செய்ய கோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்வி உதவி சில நிபந்தனைக்குட்பட்டு தான் தரப்படுகிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து படித்தால் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து கல்வியுதவி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காமராஜர் கல்வியுதவி திட்டம் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் முறையில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே கிடைக்கும். அடுத்து காமராஜர் கல்வி நிதி பெற மாணவர்கள் சென்டாக், உயர் கல்வி துறை என எங்கேயும் தேடி அலைய தேவையில்லை. தனியாகவும் எங்கே விணணப்பிக்க தேவையில்லை. மாணவர்களுக்கு சீட் கிடைத்த கல்லுாரியில் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்திற்கென தனி அலுவலர் இருப்பார். அவரை அணுகினால் போதும். அவரே நேரடியாக உயர் கல்வித் துறையின் ஆன்லைனில் காமராஜர் திட்டத்திற்காக விண்ணப்பித்து விடுவார். அடுத்து இந்த விண்ணப்பித்தினை பரிசீலினை செய்து, கல்லுாரி வாயிலாகவே மாணவர்களுக்கு அரசு வழங்கிவிடும். இதற்காக மாணவர்கள் சென்டாக் சேர்க்கை அனுமதி கடிதத்துடன், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் அந்தந்த கல்லுாரி வாயிலாகவே சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். சென்டாக் மூலம் தேர்ந்த மாணவர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு செமஸ்டரிலும் தேர்ச்சி பெற்றால் எந்த பிரச்னையும் இல்லை. படிப்பு முடியும் வரை தொடர்ந்து கல்வி உதவி கிடைக்கும். ஆனால் அரியர்ஸ் வைத்தால் அவ்வளவு தான். முதலாமாண்டில் முதல் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் தோல்வியடைந்தார் என்று வைத்து கொள்ளுவோம். அந்த மாணவர், இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுடன், முதல் செமஸ்டர் அரியர்ஸ் பேப்பர்களையும் கிளியர் செய்துவிட்டால் பிரச்னை இல்லை. அவருக்கு கல்வியுதவி தொடர்ந்து கிடைக்கும். ஆனால் அவர் தோல்வியடைந்தால் அவ்வளவு தான். கல்வி உதவி அந்தாண்டு கிடைக்காது. இதேபோல் முதல் செமஸ்டர் தேர்வில் பாஸ் செய்து, இரண்டாம் செமஸ்டர் தேர்வில் மாணவர் தோல்வியடைந்தாலும் அம்மாணவருக்கு கல்வி உதவி கிடைக்காவே கிடைக்காது. தொடர்ச்சியாக அரியர்ஸ் ஒரு மாணவர், முதலாமாண்டு, இரண்டாமாண்டு என இரு ஆண்டுகள் தொடர்ந்து அரியர்ஸ் வைத்தால் அம்மாணவர் காமராஜர் கல்வி உதவி திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு விடுவர். இதேபோல் தொடர்ச்சியாக பாஸ் செய்து, கல்லுாரி இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர்ஸ் வைத்தாலும் காமராஜர் திட்டத்தின் கீழ் அந்தாண்டு கல்வி உதவி கிடைக்காது. மக்கள் வரிப்பணத்தில் தான் கல்வி உதவித் தொகை தரப்படுகிறது. பொறுப்புணர்ந்து படித்தால் காமராஜர் கல்வி உதவி திட்டம் ஏணியாக இருக்கும்.