கூலி தொழிலாளி கொலை வழக்கு; தப்ப முயன்ற 2 பேருக்கு எலும்பு முறிவு
கடலுார்: கடலுாரில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபர்கள், தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து எலும்பு முறிந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலுார், முதுநகர் அடுத்த சோனஞ்சாவடியைச் சேர்ந்தவர் பூமிநாதன்,50. இவர், கடந்த 30ம் தேதி இரவு, அதே பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். சம்பவ இடத்தில் பதிவான சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில், டி.எஸ்.பி., தமிழினியன், இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், ஆலப்பாக்கம், வைரங்குப்பத்தைச் சேர்ந்த அப்பாவு மகன் சுதாகர்,21, வேலு மகன் முகேஷ்,21, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் மாலை சங்கொலிகுப்பம் அருகில் இயங்காத பீர் கம்பெனியில் இருவரும் பதுங்கியிருப்பதை அறிந்து, போலீசார் அங்கு சென்று, இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில், கடந்த 30ம் தேதி இரவு சுதாகர், முகேஷ் இருவரும் மது போதையில் கொலை நடந்த இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த பூமிநாதன் தீப்பெட்டி கேட்டதால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுதாகர், முகேஷ் இருவரும் பூமிநாதனை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை அப்படியே விட்டால் மாட்டிக்கொள்வோம் என்பதால், அருகே கிடந்த கல்லை துாக்கி தலையில் போட்டு கொலை செய்தது தெரிந்தது. அதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அழைத்து வந்தனர். அப்போது, தப்பிக்க முயன்ற இருவரும் அங்கிருந்த பழைய கட்டட சுவர் ஏறி குதிக்கும் போது தவறி விழுந்ததனர். இதில், சுதாகருக்கு வலது காலிலும், முகேஷூக்கு வலது கையிலும் எலும்பு முறிவும் ஏற்பட்டு, சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.