50 சதவீத மருத்துவ இடங்களை பெற சட்டம் இயற்ற வேண்டும் எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
புதுச்சேரி: தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காக தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை: தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பின்படி, மருத்துவம் படிக்கும் 5ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்க புதுச்சேரி அரசு கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு மருத்துவக் கல்லுாரி மட்டுமே பின்பற்றி வருகிறது.ஆனால், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் குறைந்த அளவில் ஊக்கத் தொகை வழங்குகின்றன. அதேபோன்று நிகர்நிலைப் பல்கலைக் கழங்கங்கள் மருத்துவ பயிற்சி பணி செய்யும் மாணவர்களுக்கு வெறும் ரூ.2,500 மட்டும் வழங்கி மாணவர்களை ஏமாற்றுகின்றன.இதுகுறித்து பயிற்சி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் அரசிடம் பலமுறை புகார் அளித்தும் அரசு வழக்கம்போல் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை பின்பற்றாத தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலை மருத்துவக் கல்லாரிகள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத மருத்துவ இடங்களை கண்டிப்பாக பெறுவதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.