பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி மாகி அணி வெற்றி
வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் நேற்று மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. பாண்டிச்சேரி பிரிமியர் லீக் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த 29வது லீக் போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணியும், மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய மாகி மெகலோ ஸ்ட்ரைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் அஜய் ரொஹோரா 54 பந்துகளில் 94 ரன்கள், ஸ்ரீகரன் 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் வீரர் அஜய் ரொஹோரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.