மலேரியா விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித்துறை சார்பில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடந்தது.பேரணியை சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தேசிய சுகாதார இயக்கக இயக்குநர் கோவிந்தராஜ், குடும்ப நலம் துணை இயக்குநர் அனந்தலட்சுமி, துணை இயக்குநர் ரகுநாத், மலேரியா திட்ட உதவி இயக்குநர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பைக் வாகன பேரணியில் சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் கூறுகையில்,மலேரியா உலக நாடுகள் அனைத்திற்கும் இன்றைய சூழலில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. புதுச்சேரியில் கள ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர்களின் ஒருங்கிணைப்புடன் மலேரியா களப்பணியாளர்கள் கூட்டு முயற்சியால், 2021ல் 5 நபர்களுக்கும், 2022ல் 0 வாகவும், 2023 ல் 6 நபர்களுக்கும் 2024ல் 4 நபர்களுக்கும் மலேரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு முதல் இதுவரை மலேரியா ஏதும் கண்டறியப்படவில்லை.இதனால், மலேரியா இல்லாத புதுச்சேரி என்ற இலக்கை எட்டும் நிலையில் உள்ளது.இந்தாண்டு 'மலேரியா நம்மோடு முடியட்டும்' என்ற கருப்பொருள் கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.ஆகையால், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத்தொட்டிகளை மூடிவைத்து பாதுகாக்கவும், கிணறு இருந்தால் அவைகளை கொசு புகாவண்ணம் வலையிட்டு கொசு உற்பத்தியை கட்டுபடுத்த வேண்டும் என்றார்.