மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா
புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் 9வது பட்டமளிப்பு விழா நடந்தது.மணக்குள விநாயகர் கல்விஅறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் கார்த்திகேயன் வரவேற்றார்.மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் அறிமுக உரையாற்றினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பேசுகையில், 'மருத்துவம் உயர்ந்த சேவையாகும். தொற்று நோய்கள், மனநல பிரச்னைகள், காலநிலை மாற்றம்போன்ற சவால்களை எதிர்கொண்டு, இரக்கத்துடன் சேவை செய்ய வேண்டும். இந்தியா 2025க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு வைத்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இது இன்னும் நிலவுகிறது. இதை உங்கள் பணியாகக் கொள்ளுங்கள். 2047 உலகளாவிய சுகாதாரக் கனவிற்காக நீங்கள் முன்னணிப் போராளிகளாக வருவதற்கு வாழ்த்துகள்' என்றார்.தொடர்ந்து 148 இளங்கலை, 120 முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த 19 இளங்கலை, 15 முதுகலை மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.விழாவில், கல்லுாரி இயக்குனர் காக்னே, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், அறக்கட்டளை டிரஸ்டி நிலா பிரியதர்ஷினி, இணை செயலாளர் வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.துணை டீன் சவுந்தர்யா நன்றி கூறினார்.