கடல்வழி பாதுகாப்பு ஒத்திகை: புதுச்சேரியில் ஊடுருவிய 5 பேர் சிக்கினர் புதுச்சேரியில் ஊடுருவிய 5 பேர் சிக்கினர்
புதுச்சேரி: கடல்வழி பாதுகாப்பு ஒத்திகையில், புதுச்சேரியில் ஊடுருவிய 5 பேர் சிக்கினர்.கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கடல்வழி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் துவங்கி 2 நாள் நடந்த கடல்வழி பாதுகாப்பு ஒத்திகையில், புதிய படகுகள், புதிய நபர்கள் யாரேனும் வருகின்றனரா என கண்காணிக்கும் பணியில், புதுச்சேரி கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் ஈடுபட்டனர்.இதனை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., கலைவாணன் மற்றும் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வேலயன் மற்றும் போலீசார், படகு மூலம் நடுகடலுக்கு ரோந்து சென்று, கடலில் வந்த படகுகளை நிறுத்தி, விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, சந்தேகப்படும்படி வரும் படகுகள், புதிய நபர்கள் யாரேனும் வருவது தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.அதன்படி, நேற்று முன்தினம் கடல்வழியாக தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை தாக்கும் நோக்கில் படகில் வந்த 3 பேரை கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்தனர். இதேபோல், பல்கலைக் கழகத்தில் நுழைய முயன்ற ஒருவரை காலாப்பட்டு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் 2 பேர் சி.ஐ.எஸ்.எப்., ஒரு தமிழ்நாடு போலீஸ், ஒரு தமிழ்நாடு கமாண்டோ என்பது தெரியவந்தது.தொடர்ந்து, நேற்று 2வது நாளாக கடல்வழி பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மாலை 6:00 மணி வரை நடந்த ஒத்திகையில், ரயில் நிலையத்தை தாக்கும் நோக்கத்தில் டம்மி வெடிகுண்டுடன் வந்த ஒருவரை, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரயில் நிலையத்தில் வைத்து பிடித்தனர். அவர், தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.