| ADDED : டிச 10, 2025 05:28 AM
புதுச்சேரி: புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்க ஆலோசனை கூட்டம், சாரம் தனியார் ஓட்டலில் நடந்தது. புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பிரமோத், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின், சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'இந்தியாவில் சர்வதேச தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் இந்தியா மட்டுமின்றி ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் 25 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். மருந்து உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள 60 நிறுவனங்களும் மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் படி, உரிமம் பெற்று மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை இணைந்து உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களில் வழக்கமான சோதனைகள், திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகள் உற்பத்தி செய்வது முதல், வினியோகம் செய்யப்படும் வரை நவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தொழில், நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், மருத்துவர்கள், வணிகர்கள் உரிமம் பெற்ற மருந்தகங்கள் மற்றும் அங்கீகரிப்பட்ட மருந்தகங்கள் மூலம் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்' என்றனர்.