மாகி ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
புதுச்சேரி : மாகியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஊக்கத்தொகை, அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். மாகி, ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரியில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த, 2022 சட்டசபையில் அறிவித்தார். ஆனால் இதுவரை உயர்த்தப்படவில்லை.இதனை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மாகி ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே, ஆயுஷ் இயக்குனரகம் எதிரே, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பயிற்சி மருத்துவர்கள், புதுச்சேரி சட்டசபையில், அமைச்சர் நமச்சிவாயம் முதல்வர் ரங்கசாமியை ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தினர். இது குறித்து பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது: எங்களுக்கு ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவக்கல்லுாரியில் அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். கேண்டீனில் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இது குறித்து முதல்வரிடம் முறையிட்டுள்ளோம். அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.