சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ஹதேனாக்களின் முதல் பகுதியான கீழ் மார்பு சுவாசத்துடன் இணைந்த ஆதம் பிராணாயாமம் செயல் முறைகளை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்த வாரம் நடு மார்பு பகுதி சுவாசத்துடன் இணைந்த மத்திய பிராணாயாமம் செயல்முறையை பார்ப்போம். ஷவாசனம் சவத்தை போல் தரையில் படுக்கவும், குதிகால்கள் சேர்ந்தும், கைகள் பக்கவாட்டில் தளர்வாகவும் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் மூச்சை இழுத்து விட வேண்டும். சபூர்ண மத்ஸ்ய ஆசனம் உடலை துாக்கி கை முட்டிகளில் தாங்கி, தலையை பின் நோக்கி விட்டு, மார்பை துாக்கி முதுகை வளைக்க வேண்டும். இந்நிலையில், சுவாசத்தை நன்கு இழுத்து விடவும், உள் இழுத்த காற்றானது நடு மார்பு, பகுதியில் சஞ்சரித்து நுரையீரலை விரிவடைய செய்து, இருதயத்தை மசாஜ் செய்து கொடுக்கிறது. ஆறுமுறை இவ்வாறு சுவாசித்து ஷவாசனத்திற்கு திரும்பவும். கழுத்தில் பிடித்தம் ஏற்படாதவாறு ஷவாசனத்தில் தலையை இருபுறமும் மெதுவாக திருப்பவும். அர்த மத்ஸ்யாசனம் ஷவாசனத்தில் இருந்து உடலை துாக்கி, உடலின் எடை முழுவதும் உச்சந்தலை, பிட்டம் மற்றும் கால்களில் உள்ள வண்ணம் இருக்கவும். இடுப்பை வளைத்து மார்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மேலே துாக்கவும். இந்நிலையில் நீண்டு சுவாசித்து, காற்றை நடுமார்பு பகுதியில் சஞ்சரிக்க வேண்டும். ஷவாசனத்திற்கு திரும்பி வந்து தலையை இருபுறமும் திரும்பவும். இது கழுத்தில் ஏற்பட்ட அசவுகரியத்தை போக்கும். மத்ஸ்யாசனம் ஷவாசனத்தில் இருந்து கால்களை நீட்டியபடி அமரவும். கால்களை மடித்து ஒன்றோடொன்று பிணைத்து பத்மாசனம் அல்லது தாமரை நிலையில், இடதுகால் வலது தொடையிலும் வலது கால் இடது தொடையிலும் வைக்கவும். பின்நோக்கி வளைந்து உச்சந்தலையை தரையில் வைக்கவும். முதுகை நன்கு வளைத்து மார்பை மேலே துாக்கவும். இந்நிலையில் நீண்டு சுவாசித்து, மூச்சுக்காற்றை நடுமார்பில் சஞ்சரிக்க செய்யவும். இவ்வாறு 6 அல்லது 9 முறை செய்தபின் அமரவும். கழுத்து வலியை நீக்க தலையை இருபுறமும் திருப்பி, பின் கால்களை பிரித்து, ஷவாசனத்திற்கு திரும்பவும். ஷஷாசனம், (இரண்டாம் நிலை) வஜ்ராசனத்தில் அமர்ந்து, உள்ளங்கைகளை தரையில், மணிக்கட்டு கால் முட்டிக்கு அருகில் இருக்குமாறு வைத்து, தலையை மேலே துாக்கி முதுகை நீட்டவும். இந்நிலையில் சுவாசத்தை இழுத்து விடவும். காற்றை நடுமார்பில் சஞ்சரிக்க வைத்து, 6 அல்லது 9 முறை இதே போல் தொடர்ந்து செய்து, பின் வஜ்ராசனத்திற்கு திரும்பவும். கழுத்து வலியை போக்க தலையை இருபுறமும் திருப்பவும். மத்திய பிராணாயாமம் ஆதம் பிராணாயாமத்தில் செய்தது போல், வஜ் ராசனத்தில் அமர்ந்து, கைகளை முறையே விலா கூட்டின் மத்யப்பகுதி, பக்கவாட்டு மற்றும் பின்பகுதியில் வைத்து ஒவ்வொரு நிலையிலும் 6 முதல் 9 முறை நீண்டு சுவாசிக்கவும். மூச்சுக்காற்றை முன்னால், பக்கவாட்டில், பின்னால் என்ற வரிசையில் நிரப்பி, சிறிது வினாடிகளுக்கு உள்ளிருத்தி கொள்ளவும். காற்றை வெளியேற் றும் போது முதலில் பின்னால், பக்கவாட்டு, முன்னால் என்ற வரிசையில் வெளியேற்றி சில வினாடிகள் மூச்சை நிறுத்தவும். இவ்வாறு 9 முறை செய்யவும். இதுவே மத்யம் பிராணாயாமம்.
பயன்கள்
மத்ஸ்யாசனம், அதன் மாறுபாடுகள் மற்றும் ஷஷாசனம் போன்ற நிலையில் சுவாசத்தை நீண்டு இழுக்கும் போது, அந்த காற்று நேரே நடுமார்பு பகுதியிலுள்ள நுரையீரலை அடையும். மத்யம் பிராணாயாமம் செய்வதன் மூலம் இருதயம் ஆரோக்கியமாகும். வலிமை பெறும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மார்பு பகுதியில் அதிகமான சக்தி பாய்கிறது. விலா எலும்பினுள் உள்ள தசைகளும், நுரையீரலின் திசுக்களும் பலமடைந்து, அதிக விரியும் தன்மைபெறும். மாரடைப்பை தவிர்க்கலாம்.