உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.50 கோடியில் நீர்நிலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

ரூ.50 கோடியில் நீர்நிலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் ஐந்து ஏரிகள் குழாய் மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 1 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும் என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.அவர், கூறியதாவது:புதுச்சேரியில் நீர்நிலைகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம் படுகை அணைக்கு ஏற்கனவே 2 முறை டெண்டர் கோரப்பட்டது. சில காரணங்களால் டெண்டர் ரத்தானது. மீண்டும் ரூ.30 கோடியில் வரும் 29ம் தேதி டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் இறுதிசெய்யப்பட்டு 15 நாட்களுக்கு பின் பணிகள் தொடங்கும். கொம்பந்தான்மேட்டில் ரூ.13 கோடியில் தடுப்பு சுவர், பாகூர் ஏரி கரையை பலப்படுத்தி ரூ.7.50 கோடியில் சாலையும் அமைக்க உள்ளோம்.மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக ஒட்டு மொத்தமாக ரூ.50 கோடியில் நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.புதுச்சேரியில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. இதில் 55 ஏரிகள், ஆற்று வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற்று நிரம்பி, அதன் உபரி நீர் அடுத்த ஏரிக்கு செல்கிறது. மற்ற 29 ஏரிகள் அப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை மட்டுமே நம்பியுள்ளன. இதில் ஆற்று வாய்க்கால், ஏரி வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறும் 55 ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி அதிக நீரை தேக்கி வைக்க புது திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்கான திட்ட அறிக்கை 15 நாட்களுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.முதற்கட்டமாக புதுச்சேரியில் உள்ள பாகூர், ஊசுடு, குருவிநத்தம், கிருமாம்பாக்கம், கோர்க்காடு உள்ளிட்ட ஐந்து ஏரிகளை குழாய்கள் இணைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் சித்தேரி அணைக்கட்டுக்கு வந்து கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை வீணாக்காமல் ஏரியில் தேக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ஒரு டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும்.இத்திட்டம் முழுமை அடையும்போது 8 முதல் 10 மாதம் வரை தண்ணீரை ஏரிகளில் தேக்குவதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். புதுச்சேரிக்கு ஒரு நாளைக்கு 120 எம்.எல்.டி., குடிநீர் தேவைப்படுகிறது.இந்த ஐந்து ஏரிகளில் தினமும் 50 எம்.எல்.டி., தண்ணீர் எடுத்து குடிநீருக்கும் பயன்படுத்தலாம். இதுமட்டுமின்றி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு டெண்டர் வைத்துள்ளோம். இந்த டெண்டர் இம்மாதம் இறுதி செய்யப்படும். காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை ரூ.120 கோடியில் விரிவாக்கம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. டி.ஆர்.பட்டினத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் உருவாக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை