ரூ. 140 கோடியில் பாதாள சாக்கடை விரிவுபடுத்த திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:பிரகாஷ்குமார் (சுயேச்சை): பொதுப்பணித்துறை கழிவுநீர் உட்கோட்ட பிரிவில் முத்தியால்பேட்டை முழுதும் பழுதடைந்த கழிவுநீர் தொட்டிகளை புதுப்பிக்க அரசின் நடவடிக்கை என்ன. இந்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படுமா.அமைச்சர் லட்சுமிநாராயணன்: முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பழுதடைந்த கழிவுநீர் தொட்டிகள் கணக்கெடுத்து சீரமைக்கப்படும். ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கடனுதவி பெற்று குழாய்கள், தொட்டிகளும் சரி செய்யப்படும்.2025-26ம் நிதியாண்டில் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும். கழிவுநீர் கோட்டம் மூலம் அனைத்து தொட்டிகளையும் சுத்தம் செய்ய 6 வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வண்டிகள் தொகுதிக்கு ஒன்று என நியமிக்கப்பட்டு, கால முறையோடு சுத்தம் செய்யப்படும்.பிரகாஷ்குமார் இந்த கோரிக்கையை நான் கடந்த 4 ஆண்டாக வலியுறுத்தி வருகிறேன். இதே பதிலை மீண்டும், மீண்டும் சொல்கிறீர்கள். கழிவுநீர் தொட்டியைக்கூட சீரமைக்க முடியவில்லை என்றால், மக்களிடம் எப்படி செல்வது. இது கூட சரி செய்ய முடியவில்லையா என்று மக்கள் கேட்கின்றனர். பாதாள சாக்கடை தொட்டி போடும்போதே அதற்கு ஏற்ற மூடியை போடுவது இல்லையா. இது கூடவா அதிகாரிகளுக்கு தெரியாது. இதனால் பாதாள சாக்கடை தொட்டிகள் பல பகுதிகளில் துர்நாற்றத்துடன் வழிந்தோடுகிறது.ஆறுமுகம் (என்.ஆர்.காங்.,): மேட்டுப்பாளையம் ரோட்டில் கழிவுநீர் தொட்டி மூடி உள்வாங்கியது. இதை அடிக்கடி சீரமைக்கின்றனர். அதுவும் மீண்டும் மீண்டும் உள்வாங்குகிறது. இதன் கட்டமைப்பு முறையே தவறு. அதனால் தான் தற்போதுள்ள பாதாள சாக்கடை குழி கட்டமைப்பினை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றேன்.நேரு (சுயேச்சை): புதுச்சேரியில் 40 ஆண்டுகளாக பாதாள சாக்கடை உள்ளது. இதனால் சேதமடைந்து வருகிறது. இதற்காகவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்க வலியுறுத்தினோம்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்கவும், விரிவுபடுத்தவும் ஆசிய வளர்ச்சி வங்கியில் ரூ. 140 கோடி கடன் கேட்டுள்ளோம். இந்த நிதியை பெற்று குழாய், தொட்டிகள் சீரமைக்கப்படும். அரசு கொறாடா ஆறுமுகம் கூறிய ஆலோசனைப்படி, பாதாள சாக்கடை குழிகளை கட்டமைப்பது குறித்துஆலோசிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.