மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம், ஊக்கத் தொகை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி, : மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம், ஊக்கத் தொகை வழங்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில், தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கடந்த 21ம் தேதி உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் 210 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.கண்காட்சி நிறைவு விழா மற்றும் சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வரவேற்றார். பெங்களூரு விஸ்வேஸ்ரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சிய இயக்குநர் சஜூ பாஸ்கரன் வாழ்த்தி பேசினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டுவர அறிவியல் கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.பிரதமராக மோடி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்க வகையில், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன்படி, இக்கண்காட்சியில் சிறப்பான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநில அரசு ஊக்கத்தொகை கொடுத்து ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது.மேலும், மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் நிதியை பெறுவதற்கு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், அதனை அரசு பரிசீலித்து ஊக்கத்தொகை வழங்கும்' என்றார்.கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.