உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் அலுவலகம் எதிரே போட்டி கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ.,; புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பரபரப்பு

அமைச்சர் அலுவலகம் எதிரே போட்டி கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ.,; புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பரபரப்பு

புதுச்சேரி : பொதுப்பணித் துறை அமைச்சர் அலுவலகம் எதிரே நேரு எம்.எல்.ஏ., போட்டி கூட்டம் போட்டதால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி என்.ஆர்.காங்., அரசிற்கு ஆதரவு அளித்து வந்த நேரு எம்.எல்.ஏ., சமீபகாலமாக அரசினை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்திற்கு வந்த நேரு எம்.எல்.ஏ., பொதுப்பணித் துறை அமைச்சர் அலுவலகத்தில் நுழைந்தார். தலைமை பொறியாளர் எங்கே என்று கேட்டார். அந்நேரத்தில், அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை பொறியாளரிடம் ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தார். திடீரென ஆவேசமடைந்த நேரு எம்.எல்.ஏ., அமைச்சர் அலுவலகம் எதிரே பிளாஸ்டிக் சேரினை இழுத்து போட்டு அமைதியாக உட்கார்ந்தார். இதனால் அமைச்சர் அலுவலகத்தில் வெளியே இருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வந்த ரமேஷ் எம்.எல்.ஏ., அமைச்சரின் பி.எஸ்., ஆகியோரும் நேரு எம்.எல்.ஏ.,வை சமாதானப்படுத்தி அமைச்சர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து செல்ல முயற்சி செய்தனர். அதை ஏற்காமல் நேரு எம்.எல்.ஏ., அமைச்சர் அலுவலக வாசலில் சேரில் உட்கார்ந்தப்படியே அமைதியாக காத்திருந்தார். நேரு எம்.எல்.ஏ., கோபமாக இருப்பதை கண்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனைவரும் சிறிது நேரத்தில் வெளியே வந்தனர். புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியும் அங்கு வந்தார்.தொடர்ந்து அமைச்சர் அலுவலகம் எதிரே நேரு எம்.எல்.ஏ., தொகுதி பிரச்னை தொடர்பாக கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினார். காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இந்த ஆலோசனை நடந்தது. இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.இது குறித்து நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது:எனது தொகுதியில் வாய்க்காலில் மின் இணைப்புகளை குதறி போட்டுவிட்டனர். இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. புதிய இணைப்பு கொடுத்தால் மட்டுமே எல்லாம் சரியாகும் என மின் துறை கூறுகின்றனர்.இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து குறைகளை சொல்லிவிட்டேன். ஆனால் இதுவரை மக்களின் பிரச்னை சரியாகவில்லை. இது தொடர்பாக, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளரை எப்போது சந்திக்க சென்றாலும் தலைமை செயலருடன் இருக்கின்றேன்.அமைச்சருடன் ஆலோசனையில் இருக்கிறேன் என, கூறி இழுத்தடித்து வருகிறார். அவரை அவருடைய அலுவலகத்தில் சென்றால் சந்திக்க முடியவில்லை. அதனால் தான் அவர் அமைச்சர் அலுவலகத்தில் உள்ளதை அறிந்து சட்டசபைக்கு நேரில் வந்துவிட்டேன். அப்புறம் அவரை சந்திக்க முடியாது என்பதால் வேறுவழியில்லாமல் தான் அமைச்சர் அலுவலகம் எதிரே ஆலோசனை கூட்டம் போட்டேன். அதிகாரம் இருக்கும் இடத்தில் தான் அதிகாரிகள் இருப்பர்.அமைச்சர் தொகுதியில் பிரச்னையை சரி செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். மற்ற தொகுதியிலும் மக்கள் பிரச்னைகளை பார்க்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி