குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் அமைக்கப்பட்ட 12 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். முத்தியால்பேட்டை தொகுதி, காட்டாமணிக்குப்பத்தில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ.12 லட்சம் மதிப்பில், புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று (நவ.,13) நடந்தது. விழாவில், வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்தார். இதன் மூலமாக, காட்டாமணிக்குப்பம், சோலை நகர், வைத்திக்குப்பம், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், கசாப்புக்காரன் தோப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரைப் பெறுவர். இத்திட்டம், அப்பகுதி மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. விழாவில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, உதவிப் பொறியாளர் சங்கர், இளநிலைப் பொறியாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.