குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி முழுதும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையின் ஏ.எப்.டி., திட்டப் பிரிவு சார்பில், வில்லியனுார் தொகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ரூ.58:3 கோடி மதிப்பில் விரிவான குடிநீர் வழங்கல் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டப் பணியாக வில்லியனுார் தொகுதி முழுதும் புதிய குடிநீர் விநியோகத்திற்கு பைப் லைன் பதிக்கும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவிப் பொறியாளர் காந்தி, செயல் பொறியாளர் விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மொத்த திட்ட மதிப்பீட்டில் பிரான்ஸ் மேம்பாட்டு முகமையான ஏ.எப்.டி., சார்பில், ரூ.49:18 கோடியும், புதுச்சேரி அரசு சார்பில், ரூ.8:85 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளனர். தொகுதி முழுதும் 58.606 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் வினியோக பைப்லைனும், 6.024 கி.மீ., துாரத்திற்கு நீரேற்று பைப் லைனும் பதிக்க உள்ளன.