உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபை உறுதிமொழி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... வலியுறுத்தல்; பொதுப்பணித் துறையில் வாரிசுகளுக்கு வேலை

சட்டசபை உறுதிமொழி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... வலியுறுத்தல்; பொதுப்பணித் துறையில் வாரிசுகளுக்கு வேலை

புதுச்சேரி, ஆக. 6- சட்டசபையில் முதல்வர் அறிவித்தபடி, பொதுப்பணித்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட சட்டசபை உறுதிமொழி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி சட்டப் பேரவையின் உறுதிமொழி குழு கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை சார்பில் அளித்த உறுதியளிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று சபாநாயகர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு, உறுதிமொழி குழு தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தியாகராஜன், ஆறுமுகம், பிரகாஷ்குமார், மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, சட்டசபை செயலர் தயாளன் மற்றும் மின்துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். கூட்டத்தில், குழு உறுப்பினர்களான எம்.எல். ஏ.,க்கள் பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மின்துறையின் வாராக்கடன் ரூ.221 கோடி உள்ளது. பொதுமக்கள் ஆயிரம் ரூபாய் கட்டவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும் நிலையில், பெரும் நிறுவனங்களில் எப்படி இவ்வளவு தொகை நிலுவை வைத்துள்ளீர்கள். அதனை உடனடியாக வசூலிக்க உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசின் ஆர்.டி.எஸ்., திட்டத்தில் டெண்டர் விடப்பட்ட பணிகள் இதுவரை துவங்கப்படாமல் உள்ளது. இத்திட்டத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் சுரக்குடி துணை மின் நிலையம் அமைத்து 40 ஆண்டிற்கு மேலாகிறது. அனைத்து உபகரணங்களும் பழுதாகிவிட்டதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதனால், அந்த துணை மின்நிலையத்தை உடன் புனரமைக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில், சட்டசபையில் அறிவித்த பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை, என்.எம்.ஆர்., ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாதது ஏன் என, கேள்வி எழுப்பினர். தலைமை செயலர் அனுமதிக்கவில்லை எனக் கூறக்கூடாது. உங்களிடம் கேட்டு தான் முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

மின்தடை புகார் தெரிவிக்கதொலைபேசி எண் அறிவிப்பு

மின் தடை குறித்து தகவல் தெரிவிக்க பொது தொலைபேசி எண் உருவாக்க எம்.எல்.ஏ.,க்கள் கூறினர். அதற்கு அதிகாரிகள், 1800 425 1912 டோல்பிரி எண் ஏற்கனவே உள்ளதாக கூறினர். அதனை கேட்ட எம்.எல்.ஏ.,க்கள், தொலைபேசி எண் இருந்து என்ன பயன். அதனை பொதுமக்களுக்கு தெரிவித்தால்தானே பயன்படும். உடனடியாக டோல்பிரி எண்ணை பொதுமக்களிடையே விளம்பரப்படுத்த உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !