போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ., போராட்டம்
புதுச்சேரி: ஊசுடு தொகுதியில் பஸ்கள் இயங்காததை கண்டித்து சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆதரவாளர்கள் போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி, ஊசுடு தொகுதியில் உள்ள கிராமங்களில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் நகரப் பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். இதற்கிடையே, இப்பகுதியில் இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் கடந்த சில மாதங்களாக சரியாக இயங்கவில்லை. இதனால், நகரப்பகுதிக்கு செல்ல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஊசுடு தொகுதியில் பஸ்கள் சரியாக இயக்கப்படாததை கண்டித்து, சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் நேற்று நுாறடி சாலையில் உள்ள போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆணையர் சிவக்குமார், அரசு செயலரை பார்க்க சென்றிருந்ததால், துணை ஆணையர் குமாரிடம் பஸ்கள் இயங்காதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியதுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பஸ்களையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையடுத்து, கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை ஆணையர் குமரன் தெரிவித்தார். இருப்பினும், ஆணையருக்காக அலுவலகத்திலேயே காத்திருந்த எம்.எல்.ஏ., சாய் சரவணன்குமார், 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆணையர் வராததால், தனது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.