கருவில் உள்ள குழந்தைக்கு நவீன சிகிச்சை பிம்ஸ் மருத்துவ குழுவினர் சாதனை
புதுச்சேரி: கருவில் உள்ள குழந்தையின் உயிரை காக்கும் வகையில், மூச்சு குழாயில் செயற்கை குழாய் செலுத்தி, பிம்ஸ் மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் தமிழக பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் 27-வாரங்கள் கடந்த நிலையில் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு ஸ்கேன் செய்த போது கர்ப்ப பையில் இருந்த குழந்தைக்கு கழுத்தின் முன் பகுதியில் மிக பெரிய கட்டி ஒன்று இருந்தது. அது மூச்சு குழாயை அடைக்கும் வகையில் இருந்ததோடு, அதிக ரத்த நாளத்தோடு இருப்பதும், இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பதும் கண்டறியப்பட்டது.மருத்துவக் குழுவினர் ஆலோசித்து கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எப்.இ.டி.ஐ., முறையை பயன்படுத்தி குழந்தையின் மூச்சு குழாயில் செயற்கை குழாய் செலுத்த முடிவு செய்தனர். இதில் தோல்வி ஏற்பட்டால் எக்ஸிட் என்ற மாற்று முறையில் சிகிச்சை தொடர முடிவெடுத்தனர். இதில் தாய்க்கும் சேய்க்கும் உள்ள அபாயம் குறித்தும் விளக்கி கூறினர். இறுதியில் எப்.இ.டி.ஐ., முறையில் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.பின், அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு கழுத்தின் முன் பகுதியில் இருந்த கட்டியையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தற்போது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளது.உயிர் காக்கும் இந்த உயர் சிகிச்சை முறையில் மகப்பேறு மருத்துவத் தலைவர் மேரி டேனியல் மற்றும் லால் பகதுார் பாலோ, கரு மருத்துவ துறை மருத்துவ நிபுணர் மணிகண்டன், மயக்கவியல் துறை மருத்துவர் சிவக்குமார், குழந்தை நல மருத்துவர்கள் பீட்டர் பிரஷாந்த், நிஷாந்த், உமா மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் சித்தானந்த், குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நிர்மல், மற்றும் மோனிகா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வெற்றிக்கரமாக செய்தனர். மருத்துவ குழுவினரை பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் பாராட்டினார்.