கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்
புதுச்சேரி: மாவட்ட அளவிலான 10வது கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில், '10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்' என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான 10வது கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்கள் மற்றும் பகுதி வாரியான வணிக அமைப்புகள், திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் பிதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் பலத்தரப்பட்ட வியாபாரங்களை முன் எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய கலெக்டர் குலோத்துங்கன், அதற்கு உண்டான அரசின் உதவி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். கூட்டத்தில், வேளாண் துறை கூடுதல் மற்றும் துணை இயக்குநர்கள், நபார்டு வங்கி மேலாளர், முன்னோடி இந்தியன் வங்கி மேலாளர், கால்நடை மற்றும் மீன் வளத்துறை துணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.