முதல்வர் தொகுதியில் குண்டும் குழியுமான சாலை பல மாதங்களாக வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலையில் அரசின் மத்திய அச்சகம், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, கலால் துறை அலுவலகம் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் இச்சாலை, கடந்த சில மாதங்களாக போதிய பராமரிப்பு இல்லாததால், மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே சாலையின் நடுவே உள்ள மெகா சைஸ் பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவமும் தினசரி நடந்தெறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, மழையின்போது தேங்கிய தண்ணீரில் சமூக ஆர்வலர் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சாலையை சீரமைப்பதற்காக எந்தவித பணிகளும் இதுவரையில் மேற்கொள்ளபடவில்லை. இச்சாலை அமைந்துள்ள பகுதி முதல்வர் ரங்கசாமியின் தொகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் தொகுதியிலேயே பல மாதங்களாக சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாதது வாகன ஓட்டிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, தொழிற்பேட்டை செல்லும் பிரதான சாலையை விரைந்து சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.