அடுத்த தேர்தலில் ஜெயிக்காவிட்டால் மொட்டை மல்லாடிகிருஷ்ணராவ் பகிரங்க சவால்
புதுச்சேரி: அடுத்த சட்டசபை தேர்தலில் கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கை ஜெயிக்காவிட்டால் மொட்டை போட்டு ஏனாமை விட்டு வெளியேறுவேன் என, மல்லாடிகிருஷ்ணராவ் சவால் விடுத்துள்ளார்.ஏனாம் பிராந்தியத்தில் சூதாட்ட கிளப் அனுமதியை கண்டித்து டில்லிக்கான புதுச்சேரி அரசு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணராவ் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று தனது ஆதரவாளர்ளுடன் போராட்டம் நடத்தினார்.அப்போது அவர், பேசியதாவது:ஏனாமில் கடந்த 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக மக்கள் சேவை செய்துள்ளேன். ஆனால் மனமகிழ் கிளப் என்ற பெயரில் ஒரு சூதாட்ட கிளப்பிற்கு கூட அனுமதி தந்தது கிடையாது. ஆனால் இன்று கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் எம்.எல்.ஏ.,வாக வந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.ஏனாமில் சூதாட்ட கிளப்புகள் இளைஞர்களை அழிவு பாதைக்கு தள்ள தடம் பதிந்துவிட்டது. பிரெஞ்சு கலாசாரம் மிக்க ஏனாமின் வரலாற்று பெருமை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. சூதாட்ட பிராந்தியமாக ஏனாமிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. சூதாட்ட கிளப் நடத்த மிகப்பெரிய அளவில் பணம் கைமாறி வருகிறது.ஏனாம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பல லட்சம் பந்தயம் கட்டி சூதாட்டம் நடக்கிறது. இதை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். இது தொடர்பாக கவர்னர், முதல்வர் ஆகியோரிடம் புகார் தெரிவிப்பேன். அடுத்த சட்டசபை தேர்தலில் ஏனாம் வளர்ச்சிக்கான தேர்தல். அடுத்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் நான் கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கை ஜெயிப்பேன். அப்படி ஜெயிக்காவிட்டால் மொட்டை போட்டு, ஏனாம் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவேன். சூதாட்ட விவகாரத்தில் கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் பொது விவாதத்திற்கு வர தயாரா. இதை பகிரங்க சவாலாகவே சொல்கிறேன். விவாதத்தை ஏனாம் அல்லது காக்கி நாடாவில் வைத்து கொள்ள அவர் ரெடியா?இவ்வாறு அவர் பேசினார்.