குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை திட்டம்; அப்போலோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நீட்டிப்பு
புதுச்சேரி : குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓப்பந்த கையோழுத்தானது. தேசிய குழந்தைகள் திட்டத்தின் சார்பில், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, ஆரம்ப கால நோய் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை மற்றும் உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு இருதயம் சார்ந்த உயர் சிகிச்சை மேற்கொள்வதற்காக, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் முதன்முதலாக 'மிஷன் ெஹல்த்தி ெஹார்ட்ஸ்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்திட்டம் காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை 34 இருதய சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு 1,464 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் 67 குழந்தைகளுக்கு இலவசமாக மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். புதுச்சேரியில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கான சிறப்பு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள், திட்ட இயக்குநர் கோவிந்தராஜன், துணை இயக்குநர் ரகுநாதன், மாவட்ட நோடல் அதிகாரி சரவணன், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தலைமை இருதய நோய் நிபுணர் முத்துக்குமரன், குழந்தைகள் இருதய நோய் மருத்துவர் சரண்யா, லிட்டில் ேஹார்ட் அறக்கட்டளை அறங்காவலர் சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.