எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை 14ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்து விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாதவர்கள், மீண்டும் திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கலாம். புதுப்பிக்கப்பட்ட சான்றுகள் இன்னும் கிடைக்கப்பெறாத மாணவர்கள், பழைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து நாளை 14 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியாவதற்குள் புதிய சான்றிதழ்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துவிட்டு, தற்போது மேலாண்மை அல்லது என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை 14ம் தேதி மாலை 3:00 மணிக்குள் தங்களின் லாக்-இன் பக்கத்தில் உள்ள கிரீவன்ஸ் பகுதி வழியாக Request to Edit Application and Apply for MQ/NRI Quota என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து கோரிக்கை அனுப்ப வேண்டும். தொடர்ந்து அன்று மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இரட்டை விண்ணப்பங்களுக்கு தடை: தகவல்களை மாற்றுவதற்காக மீண்டும் ஒரு புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கூடாது. அவ்வாறு இரட்டை விண்ணப்பங்கள் சமர்ப்பித்தால் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5:00 மணிக்கு முன்பாக விண்ணப்பங்களை முழுமையாகச சமர்ப்பித்த மாணவர்களுக்குத் திருத்தம் செய்ய வசதி வழங்கப்படாது. அவர்கள் ஏதேனும் கூடுதல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவோ அல்லது தரவுகளில் திருத்தம் செய்யவோ விரும்பினால், இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியாவதற்குள் தங்களின் லாக் இன் பக்கத்தில் உள்ள கிரீவன்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.inஎன்ற சென்டாக் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 0413-2655570 அல்லது 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.