முத்து மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்
திருக்கனுார்: திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவில் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கனுாரில் முத்து மாரியம்மன், ஆத்ம லிங்கேஸ்வரர், ஐயனாரப்பன், கெங்கையம்மன், லஷ்மி நாராயண பெருமாள், மகாலஷ்மி, ஆஞ்சநேர், வள்ளி தெய்வானை சமேத தண்டாயுதபாணி, விஷ்ணு துர்க்கை, ஐயப்பன், பொறையாத்தம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டது. மேலும், புதிதாக முத்து மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம், பராசக்தி, ராஜ கணபதி, சரஸ்வதி, லஷ்மி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்கோவில்களுக்கான, கும்பாபிஷேகம் கடந்த 28 ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, நவக்கிரஹ பூஜை, ஹோமம், முதல்கால யாகபூஜையுடன் துவங்கியது. 29 ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், பூர்ணாஹூதி நடந்தது.முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில், கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் நமச்சிவாயம்,உள்ளிட்ட திரளான பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.