உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபையை 10 நாட்கள் நடத்த வேண்டும் முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., கடிதம்

சட்டசபையை 10 நாட்கள் நடத்த வேண்டும் முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., கடிதம்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டத்தை 10 நாட்களாவது நடத்த வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: புதுச்சேரி சட்டசபை வரும் 18ம் தேதி காலை கூட உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தில், அதிகாரிகளிடம் கோப்புகள் தேங்கினால், நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடக்கும் எனக் கூறப்படவில்லை. சட்டசபையில் ஒரு மசோதா தாக்கல் செய்யும்போது, அதில் உள்ள நிறைகுறைகளை விவாதிக்க எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை தெரியப்படுத்த வேண்டும். ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அதற்குள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை செய்து முடிக்கவும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் செயலாற்ற வழிவகை செய்ய எம்.எல். ஏ.,க்கள் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், குடிநீர் தரமில்லாதது, குப்பை அகற்றாதது, வீடு கட்டும் திட்டத்தில் மானியம் வழங்காதது, சென்டாக் மூலம் காமராஜர் கல்வி நிதியுதவி மாணவர்களுக்கு வழங்காதது, 10 சதவீத இடஒதுக்கீட்டில் உயர் கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்விக்கான அரசாணை வெளியிடாதது. ஆசிரியர் பற்றாக்குறை, வேலை வாய்ப்பில் இளைஞர்களுக்கு வயது தளர்வு, வாரிசு வேலை வழங்காதது, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, வரும் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், மாநில அந்தஸ்து விவகாரம் குறித்தும் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பேச வாய்ப்பளித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண, சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்களாவது நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ