உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நரம்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை : ஜிப்மர் டாக்டர்கள் அசத்தல்

 நரம்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை : ஜிப்மர் டாக்டர்கள் அசத்தல்

புதுச்சேரி: ஜிப்மர் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறை, தென்னிந்தியாவில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் பிராக்கியல் பிளெக்சஸ் எனும் நரம்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதித்துள்ளது. விபத்தினால் பிராக்கியல் பிளெக்சஸ் நரம்புகளில் பாதிப்புக்குள்ளான இரண்டு நோயாளிகளுக்கு, கடந்த ஜூன் 29ம் தேதி இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பகக் குழாய் வழியாக பிரெனிக் நரம்பை துல்லியமாகப் பிரித்தெடுத்தனர். பின், இந்த நரம்பு மஸ்குலோக்யூட்டேனியஸ் நரம்புடன் இணைக்கப்பட்டு, நோயாளிகளின் முழங்கையை மடக்கும் செயல்பாட்டை மீட்டெடுக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த நவீன ரோபோடிக் தளம், மார்புப் பகுதியில் மிகவும் துல்லியமான முறையில் அறுவைச் சிகிச்சை செய்ய உதவியது. இது குறைந்த அளவிலான ஊடுருவல் மூலம் செய்யப்பட்டதால், திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைந்து, நோயாளி விரைவில் குணமடைய வழிவகுக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறுகையில், 'அதிநவீன தொழில்நுட்பங்களை மருத்துவச் சேவையில் இணைப்பதில் ஜிப்மர் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோடிக் அறுவைச் சிகிச்சைத் திட்டம், இன்றைக்கு பல்வேறு துறைகளின் பங்களிப்போடு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை