பெண்ணின் கவனத்தை திருப்பி நகை திருடியவர்களுக்கு வலை
புதுச்சேரி; தனியார் பஸ்சில் சில்லறையை கீழே கொட்டி, கவனத்தை திசை திருப்பி பெண்ணின் கழுத்தில் இருந்த 2.5 சவரன் நகையை திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, காமராஜ் நகரை சேர்ந்தவர் அம்புஜம், 53. இவர் நேற்று முன்தினம் அய்யங்குட்டிப்பாளையம், கோபால் கடை பகுதியில் வசித்து வரும் தனது மகள் கலைவாணியை பார்க்க சென்றார். பின், அங்கிருந்து டெம்போ மூலம் ராஜீவ் சிக்னல் பகுதிக்கு வந்து, வீட்டிற்கு செல்வதற்காக காட்டேரிக்குப்பம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி சென்றார்.அப்போது, பஸ்சில் சந்தேகப்படும்படி பயணம் செய்த 3 பெண்கள், சில்லறை காசுகளை கீழே கொட்டி, பொறுக்கி உள்ளனர். இதற்கிடையே, அம்புஜம் பல் மருத்துவ கல்லுாரி அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கி, கழுத்தை பார்த்தபோது, அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அம்புஜம் கோரிமேடு போலீசில், பஸ்சில் வரும்போது சில்லறைகளை கீழே கொட்டி பொறுக்குவது போல் நடித்து 3 பெண்கள், தனது கவனத்தை திசை திருப்பி நகையை திருடி சென்றிருக்கலாம் என புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.