உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் 14ம் தேதி பதவி ஏற்பு மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவழியாக ஒப்புதல்

புதிய அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் 14ம் தேதி பதவி ஏற்பு மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவழியாக ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ., நியமனத்திற்குமத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து வரும் 14ம் தேதி பதவி ஏற்பு விழா நடக்கிறது.புதுச்சேரி என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த மாதம் 27ம் தேதி ராஜினாமா செய்தனர்.புதிய அமைச்சராக ஜான்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.ஜான்குமார் அமைச்சர் நியமனம் தொடர்பாக கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திலும், நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான கோப்பு ஜனாதிபதி அலுவலகத்திலும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இருப்பினும் கடந்த இருவாரமாக கோப்பிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஜூலை 2 மற்றும் 7ம் தேதி நடக்க இருந்த பதவி ஏற்பு விழா கைவிடப்பட்டடது.இதற்கிடையில் நேற்றுபுதிய அமைச்சர் ஜான்குமார் நியமன கோப்பிற்கும், நியமன எம்.எல்.ஏ.,க்கள் கோப்பிற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணையும்வெளியிட்டது. மேலும் புதுச்சேரி தலைமை செயலருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் வரும் 14ம் தேதி பதவி ஏற்கின்றனர். நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு மதியம் 12:30 மணிக்கு சட்டசபையிலும், அதை தொடர்ந்து புதிய அமைச்சருக்கு கவர்னர் மாளிகையில் 1:30 மணிக்கும் பதவி ஏற்பு விழா நடக்கிறது.நியமன எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகரும், புதிய அமைச்சருக்கு கவர்னர் கைலாஷ்நாதனும் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றனர்.இரு பதவி ஏற்பு விழாவிலும் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதை தொடர்ந்து பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் கவர்னர் மாளிகை செயலகமும், சட்டசபை செயலகமும் தனித்தனியே முடுக்கிவிட்டுள்ளன.

மீண்டும் நேருக்கு நேர்

கவர்னர் - முதல்வர் இடையே ஏற்பட்ட உரசலை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கவர்னர் விழாவில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். கடந்த 5ம் தேதி ராஜ்நிவாசில் நடந்த கூட்டுறவு விழாவிலும், 7ம் தேதி நடந்த பிள்ளைச்சாவடி கோவில் கும்பாபிேஷக விழா, 8ம் தேதி நடந்த பாஷினி மொழிபெயர்ப்பு செயலி அறிமுக விழா, 10ம் தேதி நடந்தமேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார காசநோய் தடுப்பு திட்ட விழாவில் முதல்வர் பங்கேற்கவில்லை. பா.ஜ., சமரசம் செய்த போதிலும் கவர்னரை முதல்வர் நேரில் இன்னும் சந்திக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வரும் 14ம் தேதி நடக்கும் புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கயிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !