உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு... எப்போது; ராஜினாமாவை ஏற்காததால் குழப்பம் நீடிப்பு

புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு... எப்போது; ராஜினாமாவை ஏற்காததால் குழப்பம் நீடிப்பு

புதுச்சேரி: சாய் சரவணன்குமார் அமைச்சர் பதவி ராஜினாமாவை ஏற்காததால்,புதிய அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பதில் இழுபறி நீடித்து வருகிறது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இக்கூட்டணி அமைச்சரவையில் என்.ஆர்.காங்., சார்பில் முதல்வர், மூன்று அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகரும், பா.ஜ., சார்பில் சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர்கள் பதவி வகித்து வந்தனர். மேலும், 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளும் பா.ஜ.,விற்கு வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த 27ம் தேதி அதிரடியாக பா.ஜ.,வை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் அசோக்பாபு ஆகியோர் கட்சி கட்டளையை ஏற்று தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோன்று, பா.ஜ., சார்பில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சாய்சரவணன் குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ராமலிங்கம், பா.ஜ., மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.சாய்சரவணன்குமாருக்கு பதிலாக அதே கட்சியை சேர்ந்த ஜான்குமார் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிக்கும், கட்சியின் மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இந்த பரிந்துரை கடிதங்கள் மற்றும் ராஜினாமா கடிதங்கள் கவர்னர் வழியாக, மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் புதிய அமைச்சர் அனைவரும் முறைப்படி கடந்த 30ம் தேதி நடைபெற்ற கட்சி தலைவர் பதவி ஏற்பு விழா அன்றே பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 30ம் தேதி கட்சி தலைவர் பதவி ஏற்பு விழா மட்டுமே நடைபெற்றது. புதிய அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு 2ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டது. பின்னர் அது 4ம் தேதி, 7ம் தேதி என நாட்கள் கடத்தப்பட்டு தற்போது வரும் 14ம் தேதி பதவி ஏற்பார்கள் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய்சரவணன்குமார் அமைச்சர் பெயர்பலகையுடன் கூடிய காரில் வலம் வந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எனது ராஜினாமாவை மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஏற்கவில்லை. எனது ராஜினாமா கடிதம் ஏற்கும்வரை, நான் அமைச்சராகவே தொடர்வேன் என்றார். இந்த குழப்பங்களுக்கு இடையே, அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜான்குமாருக்காக சட்டசபையில் புதிய அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது.புதிய அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பில் கடந்த 11 நாட்களாக நிலவி வரும் குழப்பம் குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, புதுச்சேரி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மொத்த எம்.எல்.ஏ.,க்களில் 15 சதவீதம் அளவிற்கே அமைச்சரவையில் இடம் பெற முடியும். அதன்படி மொத்தமுள்ள 30 எம்.எல்.ஏ.,க்களில் 5 பேர் (முதல்வர் மற்றும் 4 அமைச்சர்கள்) அமைச்சரவையில் இடம் பெற்றனர். பாரூக் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் ஒப்புதலுடன் அமைச்சரவையில் இடம் பெறுவோர் எண்ணிக்கை 6 (முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள்) ஆக உயர்த்தப்பட்டது. அதுவே தற்போதும் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், சாய் சரவணன்குமார் தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வரிடம் கடிதம் கொடுத்தார். அதனையேற்று, அதற்கான கோப்புகள் கவர்னர் வழியாக மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய உள்துறை இன்னும், சாய் சரவணன்குமாரின் ராஜினாமாவை ஏற்கவில்லை. அதனையேற்றால் தான், புதிய அமைச்சரை நியமிக்க முடியும்.இதன் காரணமாகவே, புதிய அமைச்சர் பதவி ஏற்பு தள்ளிப்போகிறது என்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ, ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க, இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், சிக்கல் நீடித்து வருவதாக கூறுகின்றனர். எப்படியிருப்பினும், வரும் 14ம் தேதி புதிய அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பார்கள் என, பா.ஜ., வினர் ஆணித்தரமாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை