உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் நடந்த 'பந்த்' போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து, இண்டியா கூட்டணி சார்பில் நேற்று மாநிலம் தழுவிய 'பந்த்' போராட்டம் நடந்தது.அதிகாலை முதல் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படாததால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். நெல்லித்தோப்பில் பி.ஆர்.டி.சி., பஸ், முதலியார்பேட்டையில் தமிழக அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.பந்த் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அரசு விடுமுறை அறிவித்தது. அதேநேரத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. நகரின் பிரதான வீதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் இதே நிலை காணப்பட்டது. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை.புதுச்சேரியில் 11 இடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் மறியலில் ஈடுபட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் 855 பேரை போலீசார் கைது செய்தனர். பந்த் போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ