பாகூர், கிருமாம்பாக்கம் ஏரிகள் ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு
பாகூர்: ஆக்கிரமிப்பு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் ஏரியில் நேற்று ஆய்வு செய்தார்.பாகூர் ஏரி மற்றும் கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதயைடுத்து, புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்று சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, நில அளவை இயக்குனர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாக்கிருஷ்ணன், தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கிருமாம்பாக்கம் பெரிய ஏரி மற்றும் பாகூர் ஏரிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், '' 1970ம் ஆண்டு காலத்தில், வறண்டு கிடந்த ஏரியில் விவசாயத்திற்கு மக்கள் இடம் பிடித்தனர். பின்னர், விளை நிலமாக மாற்றப்பட்டு, அவரவர் பெயரில் பட்டா மாற்றம் ஆகிவிட்டது. அந்த பட்டா நிலங்கள் மனைகளாக பிரிக்கப்பட்டு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டது உறுதியானால், அந்த பட்டாக்களை ரத்து செய்யவேண்டும். கரையாம்புத்துார் ஒடப்பேரியும் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.கிருமாம்பாக்கம் பெரிய ஏரிக்கு ஏற்பட்ட நிலை தான், அந்த ஏரிக்கும் ஏற்படும் . அதனை முன்கூட்டியே தடுத்திட வேண்டும். மேலும், பாகூர் ஏரியினுள் உள்ள பட்டா நிலங்களை ரத்து செய்து, நீர்பிடிப்பு அளவை உயர்த்தி, பாதுகாத்திடவும், சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்றார். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்து புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது, நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் செல்வராசு, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, நில அளவை அதிகாரிகள் உடனிருந்தனர்.