கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புதுச்சேரி: மகாளயபட்சம் நிறைவு அமாவாசை தினமான நேற்று ஏராளமானோர்,கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மகாளயபட்சம் என்பது புண்ணிய காலமாகும். இந்த நாட்களில், நம் மீது அன்பு, பாசம் காட்டி வளர்த்து, நமக்காக பல சுகங்களை தியாகம் செய்த முன்னோர்களை வணங்க வேண்டும். பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் அனுமதி பெற்று முன்னோர்கள் பூமியை வந்தடைந்து, மகாளயபட்ச நாட்களாக 15 நாட்களும் நம்முடன் தங்கி, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதிக்கின்றனர். இந்த நாட்களில், தங்களது வீட்டில் பூஜை செய்வதைவிட, பசுக்கள், நீர் நிலைகள் நிறைந்த இடத்தில் பூஜை செய்தால் அதிக பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். எனவே, கருவடிக்குப்பம் ஓம் சக்தி நகரில் உள்ள கோமாதா ஆலயத்தில் மகாளயபட்ச காலம் துவங்கிய நாள் முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. ஏராளமானோர் தினமும் வந்து தர்ப்பணம் கொடுத்தனர். மகாளயபட்சம் நிறைவு பெற்ற அமாவாசை தினமான நேற்று ராஜா சாஸ்திரி தலைமையில் காலை முதல், கோமாதா கோவிலில் கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, முன்னோர்கள் வழிபாடு, தர்ப்பணம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கோ பூஜைகளில் பங்கேற்றத்துடன், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.