வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மனை, வீட்டை கையகப்படுத்தி சீல் கோர்ட் உத்தரவால் அதிகாரிகள் அதிரடி
புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி கையப்படுத்தி சீல் வைக்கப்பட்டது. புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி முதலியார். இவர், தனது காலிமனை மூலம் வரும் வருமானத்தை கொண்டு வேதபுரீஸ்வரர் கோவில் முருகனுக்கு கந்தசஷ்டி விழா வேல் வாங்கும் உற்சவம் நடத்த வேண்டும் என எழுதி வைத்துள்ளார்.காலி மனையில் அவரது வாரிசுகள் வீடு கட்டி வாடகை விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு உற்சவம் நடத்தி வந்தனர். வாடகை இருந்த தம்பதியினர், இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால், வாடகையை கோவிலில் கொடுப்பதாக கூறினர்.வாரிசுதாரர்கள் முத்துகுமரசாமி, கிருஷ்ணசாமி சார்பில் வீட்டை காலி செய்ய புதுச்சேரி கோர்ட்டில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.2018 ம் ஆண்டு வீட்டை காலி செய்ய தீர்ப்பு வந்தது. ஆறுமுகம் செண்பகவள்ளி உச்சநீதிமன்றம் சென்றனர். அதிலிலும் வீட்டை காலி செய்ய தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்ததால் கடந்த ஜூன் மாதம் செண்பகவள்ளி குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டை பூட்டி வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான, பட்டா எண்: 211, கொண்ட 1.56 ஆர் அளவுள்ள இடம், ஈஸ்வர தர்மராஜா கோவில் தற்காலிக அறங்காவலர் என்ற பெயரில் பதியப்பட்ட மனையுடன் கூடிய வீடு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி அரசு வழிகாட்டுதல்படி, நேற்று கோவில் நிர்வாகத்தால் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கையப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.