மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஒரு நாள் பயிலரங்கம்
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில், 'செயற்கை நுண்ணறிவு உருவாக்கம்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, நடந்து கருத்தரங்கிற்கு, மணக்குள விநாயகர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். டில்லி டெக் புளும்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைமை நிர்வாக அதிகாரி வருண் பவார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, செயற்கை நுண்ணறிவின் தற்கால பயன்பாடு மற்றும் அதன் வளர்ச்சி நிலைகள், எதிர்கால போக்குகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இந்திய அளவில் முதன்மை பெற்ற டெக் புளும்ஸ் நிறுவனம், ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., நிறுவன மாணவர்களுக்கு இப்பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் மோகனரங்கன் செய்திருந்தார்.