பேரிடர் நிவாரண உதவிக்கு இணைய வழி சேவை துவக்கம்
புதுச்சேரி: இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிக்கு உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக பேரிடர் நிவாரண உதவி சேவை, இணையவழி சேவை துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தகவலியல் மையம் இணைந்து, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்கள், நிவாரண உதவிக்கு உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக 'பேரிடர் நிவாரண உதவி சேவை' என்கிற இணையவழி சேவையை துவங்கி உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உரிய பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட்டு, புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையத்தளமானது, https://psdma.py.gov.inபொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியில், புதுச்சேரி பேரிடர் மேலாண்மை மாநில செயற்குழு இயக்குனர் சுதாகர், துணை கலெக்டர் மாசிலாமணி, என்.ஐ.சி., புதுச்சேரி துணை தலைமை இயக்குநர் சுபேந்து குமார், என்.ஐ.சி., மாநில தகவலியல் அலுவலர் மகேஷ் எம்.ஹல்யால், புதுச்சேரி கூடுதல் மாநில தகவலியல் அலுவலர் டாக்டர் இரவீந்திரன், புதுச்சேரி தகவல் தொழில்நுட்பம் துணை இயக்குநர் அன்புராஜ் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த இணைய வழி சேவையின் மூலம், பேரிடரினால், குடியிருக்கும் வீடு சேதம் அடைந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர் இறக்க நேர்ந்தாலோ அல்லது அன்றைய நாளின் வாழ்வாதார பாதிப்பு நேர்ந்தாலோ, பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி வேண்டி தாமாகவோ அல்லது தங்களது கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவோ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணைய வழியாகவே தெரிந்து கொள்வது மட்டுமின்றி, பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, திட்டங்கள் மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.